பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பத்திரிகையாளர் மொஹ்சின் ஜமீல் பெய்க்கைக் கைது செய்துள்ளமைக்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு பிரிவு பயன்படுத்தியதற்காக உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெய்க்கிற்கு எதிரான விசாரணையின் போது, கடுமையான மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளை ‘தவறாக’ செயற்படுத்தியதற்காக, புலனாய்வு பிரிவின் சைபர் குற்றங்கள் தொடர்பான பிரிவின் இயக்குநர் காரணங்களை கூறுமாறு நீதிபதி மினல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
‘அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆளப்படும் ஒரு ஜனநாயக சமூகத்தில் பேச்சுரிமைக்கு அச்சுறுத்தல் அல்லது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்காக கொடூரமான முறையில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று நீதிபதி மினல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
‘சட்டத்தின் ஆட்சி இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என நீதிபதி மினல்லாஹ் கேள்வி எழுப்பியதோடு ‘இந்த நாட்டில் இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதா? என்றும் கடுந்தொனியில் கோரியுள்ளார்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் பெய்க், சைபர் குற்றப் பிரிவில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூத்த பத்திரிகையாளர் மொஹ்சின் ஜமீல் பெய்க் கைது செய்யப்பட்டார்.
இதற்கு சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தது. .
குறிப்பிடத்தக்க வகையில், இம்ரான் கான் அரசாங்கம் சமீபத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தது, அதன்படி ‘நபர்’ என்பதன் வரையறையானது எந்தவொரு நிறுவனம், சங்கம், அமைப்பு, அதிகாரம் அல்லது வேறு எதையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நபரின் ‘அடையாளத்தை’ தாக்கியதாக கண்டறியப்பட்ட எவருக்கும் இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலர், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ், இம்ரான் கான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் குறித்து சாடினார்.
அவருடைய டுவிட்டர் பதிவில் ‘இந்தச் சட்டங்கள் இறுதியில் இம்ரான் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும்’ என்று கூறினார்.
பாகிஸ்தான் அனைத்து செய்தித்தாள்கள் சங்கம், பாகிஸ்தான் செய்தித்தாள் ஆசிரியர்கள் கவுன்சில, பாகிஸ்தான் ஃபெடரல் யூனியன் ஒஃப் ஜர்னலிஸ்ட்கள், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் மின்னணு ஊடக ஆசிரியர்கள் மற்றும் செய்தி இயக்குநர்கள் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் திருத்தங்களை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இது நாட்டில் பத்திரிகை சுதந்திரம், பேச்சு மற்றும் எதிர்ப்புக் குரல்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு அப்பட்டமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பத்திரிகையாளர் மூசா கான்கேலின் 13ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் ஹமீத் மிர், பத்திரிகையாளர்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்று பகிரங்கமாக கூறியமை குறிப்பிடத்தக்கது.