தமிழரசுக்கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக ஒரு கையெழுத்து வேட்டைப் போராட்டத்தை நடத்திவருகிறது.இப்போராட்டத்திற்கு மூவினத்தவர்கள் மத்தியிலும் ஆதரவு இருக்கிறது.தமிழ் பகுதிகள் எங்கும் தமிழரசுக்கட்சியினர் பொது இடங்களில் நின்று கையெழுத்துக்களை வாங்கிவருகிறார்கள். சுமந்திரன் தென்னிலங்கையில் உள்ள பிரமுகர்களைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவருகிறார். அவருடைய இம்முயற்சிக்கு விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஆதரவைக் காட்டியுள்ளன.
ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டம் முஸ்லிம்களுக்கும் எதிராகத் திரும்பியது. அதனால் இப்பொழுது சுமந்திரனின் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னால் உள்ள சூழ்ச்சிகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டு அரசாங்கத்தோடு முரண்பட்டுக் கொண்டிருக்கும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்தும் அப்போராட்டத்தில் கையெழுத்து வைத்துள்ளார்.அதைவிட முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க கையெழுத்திட்டுள்ளார்.இப்போராட்டத்திற்கு உள்நாட்டிலும் கொழும்பில் உள்ள மேற்கு நாட்டு தூதரகங்கள் மத்தியிலும் உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புக்கள் மத்தியிலும் ஆதரவு உண்டு.
இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் முக்கியத்துவமானது. ஜெனிவா கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. அதேசமயம் வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் கூடும். அதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இம்முடிவு பயங்கரவாத தடைச் சட்டத்தோடு தொடர்புடையது.பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அதை அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்கின்றது. அதை ஒரு முன் நிபந்தனையாக முன்வைக்கின்றது. அதனால் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவம் ஒன்றை கொண்டு வரப்போவதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் திருத்தப்பட்ட அந்த வடிவத்தையும் மனித உரிமை அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினரும் சட்ட விற்பன்னர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றக்கோரி சுமந்திரன் தொடங்கியிருக்கும் கையெழுத்து வேட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்படி ஒரு நேரத்தில் இப்படி ஒரு போராட்டத்தை சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி முன்னெடுப்பதை ஆதரிக்க வேண்டும். ஆனால் அதே சமயம் சில அடிப்படைக் கேள்விகளையும் இங்கே கேட்க வேண்டும்.
முதலாவது கேள்வி, தமிழரசுக்கட்சி, கடந்த ஆட்சியின் போது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் மறைமுகப் பங்காளியாக இருந்தது. மிகக் குறிப்பாக மைத்திரிபால சிறிசேன ஒரு யாப்புச் சதி முயற்சியை முன்னெடுத்த பொழுது ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தது சுமந்திரனே என்று பாராட்டப்பட்டது. அதாவது இலங்கைத்தீவின் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் என்று அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது. அந்தளவுக்கு தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியோடு காணப்பட்ட சுமந்திரனும் கூட்டமைப்பும் அந்த ஆட்சிக் காலகட்டத்திலேயே ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முயற்சிக்கவில்லை? அதுதொடர்பாக ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் மீது ஏன் நிர்ணயகரமான விதங்களில் அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லை? ஆட்சியின் மறைமுகப் பங்காளிகளாக இருந்த காலகட்டத்தில் செய்யத் தவறிய ஒன்றை ஏன் இப்பொழுது செய்கிறார்கள்?
இது தொடர்பில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த மைத்திரிபால சிறிசேனவின் கட்சி மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அங்கஜன் அதை சுமந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டாக முன்வைக்கிறார். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்தது அவரும் அங்கம் வகித்த ஓர் அரசாங்கம்தான். எனவே முடிவெடுக்கும் நிலையில் இருந்தது மைத்திரியும் அவருடைய அரசாங்கமும்தான். எனவே இதில் முதல் குற்றச்சாட்டு மைத்திரிபால சிறிசேனவின் கட்சியை நோக்கித்தான் முன்வைக்கப்பட வேண்டும். அங்கஜன் சுமந்திரன் மீது பழியைப் போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது.
இரண்டாவது கேள்வி,இதில் சந்திரிக்கா போன்றவர்கள் கையெழுத்து வைத்திருக்கிறார்கள். இதுவிடயத்தில் சந்திரிகாவிடம் மனமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம். எனினும் 10 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஒருவர், தான் செய்யத் தவறிய ஒன்றை இப்பொழுது செய்ய வேண்டும் என்று கூறுவதை எப்படி விளங்கிக் கொள்வது ? தான் அதிகாரத்தில் இருந்தவரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் இருப்பவர்களுக்கு அவர் பதில் கூறுவாரா?
இது ஒரு அடிப்படையான கேள்வி. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் கருத்துக்கூறும் பலரும் அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் தமிழ்மக்களின் நியாயங்களை கதைப்பதை நாம் பார்க்கிறோம்.உள்நாட்டு அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் அரசுத் தலைவர்கள் பலரும் அவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்திய ராஜதந்திரிகள் பலர் அவ்வாறு தவறு நடந்துவிட்டது என்பதனை ஓய்வு பெற்ற பின்னர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ஓய்வு பெற்றபின் ஈழத் தமிழர்களுக்கு சாதகமான உண்மைகளை தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். படியாக இலங்கை இனப்பிரச்சினையில் தாம் பதவியில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தபோது முடிவெடுக்காத பலரும் ஓய்வூதியர்கள் ஆனபின் ஞானம் பெற்று நீதிக் கதைகளை எழுதுகிறார்கள். திருமதி சந்திரிகாவின் விடயமும் அத்தகையதே. அவருடைய கைகளிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் கண்ணீரும் ரத்தமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது கேள்வி ஏற்கனவே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஏனைய கட்சிகளுமாக மொத்தம் 5 கட்சிகள் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான ஒரு கூட்டுக்கடிதத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்த ஒரு பின்னணியில் சுமந்திரன் இதுவிடயத்தில் தனி ஓட்டம் ஓடக் காரணம் என்ன? குறிப்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதும் விடயத்தில் சுமந்திரனும் கடைசி கட்டத்தில் அதில் பங்காளியாக மாறினார். இப்போது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர் காட்டிக் கொள்கிறார்.ஆனால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறுதி ஆவணத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பலவற்றுக்கு அவரும் பொறுப்பு.ஒரு புறம் ஆறு கட்சிகளோடு இணைந்து ஒரு கூட்டு ஆவணத்தை இறுதியாக்கிய அவர், இன்னொருபுறம் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஏனைய ஐந்து கட்சிகளையும் ஒண்றிணைக்காது தனி ஓட்டம் ஓடுகிறார்.அதோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை தமிழரசுக் கட்சி தனியாகச் சந்தித்திருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
கடந்த 16ஆம் திகதி யாழ் நல்லூரில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் இந்தியாவுக்கு கடிதத்தை அனுப்பிய ஆறு கட்சிகள் இணைந்து ஒரு கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியிருந்தன. அக்கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி பங்குபற்றவில்லை. அதன் தலைவர் உடல்நலக் குறைபாடு காரணமாக வரவில்லை என்று கூறப்பட்டது. அப்படி என்றால் ஒரு பிரதிநிதியை அனுப்பி இருந்திருக்க வேண்டும்.அதுவும் நடக்கவில்லை. கருத்தரங்கில் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்களையும் காண முடியவில்லை.ஆனால் அதே நாளில் காலையில் யாழ் நகரப் பகுதியில் நடந்த சுமந்திரனின் கையெழுத்து வேட்டைப் போராட்டத்தில் முதல் ஆளாக மாவை தனது கையெழுத்தை வைத்திருக்கிறார். இது உள்நோக்கமுடையது இல்லையா?
தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. ஏனைய கட்சிகளோடு இணைந்து கூட்டாக இந்தியாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு அதை அனுப்பிய கையோடு தனியாக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கின்றது. கடந்த வியாழக்கிழமை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலப்பறிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்றாக நின்றதுபோல பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராகவும் ஒன்றாக நிற்காதது என்? இந்தப் போராட்டத்தில் திருமதி சந்திரிக்காவையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் இணைப்பதற்கு முன், கூட்டமைப்புக்குள் உள்ள பங்காளிக் கட்சிகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட எல்லாக் கட்சிகளையும் சிவில் அமைப்புக்களையும் ஓரணியில் திரட்டியிருக்க வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சி அவ்வாறு செய்யவில்லை. அது தனியோட்டத்துக்குத் தயாராகிறதா?
-நிலாந்தன்-