உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இது குறித்த கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதிலளித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் இந்தியத் தூதரகம் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளதாகவும், உக்ரைன் அரசின் ஒத்துழைப்புடன் பல மாணவர்கள் நேற்றே கார்க்கிவ் நகரைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மாணவரையும் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துள்ளதாகத் தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், கார்க்கிவ் மற்றும் அதன் அருகில் உள்ள மாணவர்களை உக்ரைனின் மேற்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கச் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யும்படி உக்ரைன் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.