பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50பேர் காயமடைந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக அதிகாரிகள் தெரித்தனர்.
மேலும் துப்பாக்கி ஏந்தியவர்கள் உள்ளே, பிரதான மண்டபத்தில் நிரம்பியிருந்த வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அறிய முடிகின்றது.
எனினும், எந்த குழுவும் உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
மத்திய பெஷாவரில் உள்ள மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு அதிகாரி உயிரிழந்ததாகவும், மற்றொரு அதிகாரி படுகாயமடைந்ததாகவும் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில், ‘காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் மற்றும் சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றிச் செல்வதை பொலிஸார் வெளியிட்ட காணொளி காட்டுகிறது.
கடந்த ஆண்டு காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.