உக்ரைனில் போரை தீவிரப்படுத்த சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா கோரி வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீன உபகரணங்களை கோரி வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்யா எந்த வகையான ராணுவத் தளவாடங்களை சீனாவிடம் கோருகிறது என்பதைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டுக்கு உதவி செய்வதற்கு சீனா தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நியூயார்க் டைம்ஸிலும் ஒரு செய்தியில், பொருளாதாரத் தடைகளின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனாவிடம் ரஷ்யா கோரியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வொஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் பதில் அளிக்கையில், ‘ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கள்கிழமையன்று ரோம் சென்று சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மோதலில் சீனா இதுவரை தன்னை நடுநிலை வகிப்பதாக காட்டுவதற்கே முற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் பொது அவையில் நடுநிலை வகித்தது. ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.