உக்ரைனின் நகர மேயர்கள் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தென்கிழக்கு நகரமான டினிப்ரோ நகர மேயரான யேவென் மட்வியேவ் என்பவரை, ஆயுதமேந்திய நபர்கள் கடத்திச் சென்றதாக உக்ரைனிய அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று மெலிடோபோலின் மேயர் இவான் ஃபெடோரோவ் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் இதுகுறித்து கூறுகையில், ‘மெலிடோபோல் மற்றும் டினிப்ரோருட்னே மேயர்களை, ரஷ்ய ஆயுதப் படைகள் கடத்தியதை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இது உக்ரைனில் உள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீதான மற்றொரு தாக்குதல் மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் சட்டவிரோத மாற்று அரசாங்க கட்டமைப்புகளை நிறுவுவதற்கான முயற்சியாகும்’ என கூறினார்.
3 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவுக்கு பதிலாக, கலினா டேனில்சென்கோ என்பவரை இடைக்கால மேயராக ரஷ்யப் படை நியமித்துள்ளது.
இதையடுத்து உள்ளூர் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், பழைய மேயர் இவானை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபடவேண்டாம் எனவும், அது ‘தீவிரவாதம்’ எனவும் கூறினார். அத்துடன் நகரில் ஊடரங்கு உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.