முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது வாக்குமூலம் அளித்த அவர், ‘”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன்.
அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது.
மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன். சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை.
கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.