டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை வழங்கவுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் தண்டனையை எதிர்கொள்ளும் நபர்களின் பெயரையோ அல்லது அவர்கள் எந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் என்பதையோ பெருநகர பொலிஸ்துறை வெளிப்படுத்தவில்லை.
ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ஹில்மேன்’ என்று பெயரிடப்பட்ட விசாரணை தொடர்பான முறையான சட்ட கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்ட 100 பேரில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஒருவர்.
தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர், பிரதமர் அல்லது அரசாங்கத்தில் உள்ள எவரும் அபராதம் விதிக்கப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
பெருநகர பொலிஸ்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் கொவிட் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இப்போது நிலையான அபராத அறிவிப்புகளுக்கான ACRO கிரிமினல் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்திற்கு செய்யப்படும் நிலைக்கு முன்னேறியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.