இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான விமான சேவையை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக மாற்றுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க – மொஸ்கோ நேரடி விமான சேவை நேற்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களுக்கு காப்புறுதி செய்திருந்த பிரித்தானிய விமான நிறுவனமானது, ரஷ்யாவிற்கு பயணிக்கும் ஸ்ரீலங்கன் விமான காப்புறுதியை இரத்து செய்திருந்தது.
இதன்காரணமாகவே கட்டுநாயக்க – மொஸ்கோ நேரடி விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
குறித்த விடயமானது இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமல்ல எனவும் தமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதொரு விடயத்தினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு தமது விமான சேவையை இடைநிறுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை இடைநிறுத்த எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை எனவும், இது ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட்டதொரு தீர்மானம் என வெளியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.