நுகேகொட போராட்டமானது மத அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது எனும் அர்த்தத்தில் அரசாங்கம் கூறவில்லை எனவும், மாறாக அடிப்படைவாத சிந்தனையுள்ள அரசியல் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்களுக்கு இன்று பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்றால் நாமும் இதற்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயராகவே உள்ளோம்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இன்று நாட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகைத் தருகிறார்கள். டொலர் பிரச்சினைக்கும் இதன் ஊடாக தீர்வுகள் கிடைக்கும்.
இதனால் இன்னும் 5-6 மாதங்களில் டொலர் பிரச்சினை இல்லாமல் போகும் நிலைமைக் காணப்படும்போது, எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்யவே முயற்சித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் எம்மால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை மக்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எமது நாடு அமைதியாக இருந்தால் தான் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும்.
இவ்வருட இறுதிக்குள் 5 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை கொண்டுவருவதுதான் எமது நோக்கமாகும். எனவே, இதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
நேற்றைய இந்தப் போராட்டத்தில் 2015 இல், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஜே.வி.பி.யின் உறுப்பினர் ஒருவர் இருந்தமையை நாம் காணொளியூடாக அவதானித்தோம்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சில அரசியல் கட்சிகள், பேருந்துக்கு இராணுவமே தீ வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது முதலில் அமைதியாக இருந்த ஜனாதிபதி, இது கலவரமாக வெடித்தபோதே இதனை முழு அதிகாரம் கொண்டு கட்டுப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டார்.
எம்மைப் பொறுத்தவரை இது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போராட்டமாகவே நாம் பார்க்கிறோம்.
அரபு வசந்தம் எனும் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அடிப்படைவாதிகளால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக நாம் கூறுகிறோம்.
அடிப்படைவாதிகள் என்றால் மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல. ஜே.வி.பியினராகட்டும், ஐக்கிய மக்கள் சக்தியினராகட்டும், ஏனைய அரசியல்கட்சிகளாகட்டும் இவர்களின் செயற்பாடுகளினால்தான் இந்தப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியது.
எமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் ஊடாகத்தான் நாம் அடிப்படைவாதிகளால்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக கூறியுள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக இரண்டுபேராவது உயிரிழக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் இலக்காகும். இந்த சம்பவம் இடம்பெறும்போது ஜனாதிபதியும் அவரது வீட்டில்தான் இருந்தார்.“ எனக் குறிப்பிடத்தக்கது.