கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மோதரை காவற்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.
இளம் ஊடகவியலாளரும் சமூக ஊடக பதிவாளருமான அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான முகநூல் பக்கத்தின் பக்கத்தின் நிர்வாகியாக செயற்பட்டதாக கூறப்படுகிறது.
மோதரை பொலிஸில் இருந்து சென்றதாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
ஆனாலும் மோதரை காவல் நிலையத்தில் அவ்வாறான ஒருவர் இல்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் தற்போது அவர் மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.