ரஷ்யாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார்.
இந்தநிலையில் விக்டர் ஓர்பனுக்கு புடின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச அரசியலில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியுள்ளார்.
இதேபோல் செர்பியாவில் நடந்த தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் வுசிக்கிற்கும் புடின் வாழ்த்து கூறியுள்ளார்.
தேர்தல் முடிவானது அவரது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த பெரிய அளவிலான மக்கள் ஆதரவை உறுதிப்படுத்துவதாக புடின் கூறியுள்ளார்.
வுசிக்கின் நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை யுக்தியை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.