ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்தைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், ‘நிலக்கரி மீதான தடையால் ஒரு வருடத்திற்கு 4.4 பில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்ட வர்த்தகத்தை ரஷ்யா இழக்கும். எனினும் புதிய ஒப்பந்தங்களைத் தடை செய்வதற்கு முன் மூன்று மாத கால அனுமதி வழங்கப்படும். ஒப்பந்தபடி ஏற்கெனவே ரஷ்யா அனுப்பி விட்ட நிலக்கரிக்கும் இந்த தடை பொருந்தாது.
ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் விவாதித்து இதற்கான செயற்திட்டத்தை உருவாக்குவார்கள். பெரும்பாலான ரஷ்ய ட்ரக்குகள் மற்றும் கப்பல்கள்நுழைவதை தடை செய்யும் உத்தரவையும் ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிகிறது. அதேசமயம் விவசாய பொருட்கள், மனிதாபிமான எரிபொருள் உதவிக்கு விதிவிலக்கு வழங்கப்படும்’ என கூறினார்.
ரஷ்யாவின் எரிபொருளை தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிகளை முன்பு தடுத்த ஜேர்மனி, ரஷ்ய நிலக்கரி தடையை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விவாதித்து வருவதாகவும் தெரிகிறது.
வடமேற்கு ஐரோப்பாவிற்கு, ரஷ்யா தெர்மல் நிலக்கரியில் பாதியை வழங்குகிறது. இதன் மூலமே அங்குள்ள மின் நிலையங்களுக்கு எரிபொருளாகவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி விலை 7.9 சதவீதம் உயர்ந்து ஒரு டன் 205 டன்களாக இருந்தது.
இதில் ஜேர்மனி மற்றும் ஹங்கேரி உட்பட பல அரசுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய எண்ணெயை படிப்படியாக மட்டுமே குறைக்க முடியும் என இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன.