ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான கே.டி.லக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனை மோதலில் உயிரிழந்த நபர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கேகாலையில் இன்று ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் விநியோகம் முறையாக வழங்கப்படுவதாக எண்ணெய் அமைச்சர் கூறினார். நான்கு நாட்களாக அந்த கூட்டுறவு கொட்டகையில் எரிபொருள் இல்லை.
இந்த போராட்டம் மிகவும் அமைதியான போராட்டம். எண்ணெய் பவுசரை நிறுத்தி பழைய விலைக்கே எரிபொருளை கேடடார்களே தவிர யாரும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தவில்லை. நிராயுதபாணியான போராட்டம். முச்சக்கர வண்டிக்கு பொலிசார் தீ வைத்து எரிக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. பொலிஸாரை வழிநடத்துவது யார்?
கே.டி.லக்ஷான் 42 வயது மதிக்கத்தக்கவர். இவரது மனைவி பிரியங்கனி. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 18 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இன்று அவர்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். அந்த மனிதன் ஏன் அங்கு சென்றான்? அவருக்கு ஒரு லாரி டெக் உள்ளது. பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு உணவளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 4 நாட்களாக லாரியில் டீசல் இல்லை. அந்த மனிதன் வாழ வழியில்லாது பிழைப்பு நடத்த அங்கு சென்றான். இறுதியாக ஒரு புல்லட் சாப்பிட்டார். அது நியாயமா? உங்களுக்கு கவலை இல்லையா? வாழ்வது அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அல்ல. குடும்பத்தை வாழவைக்க சென்றவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஒரு கொலை. இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் பலர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.