சுமார் ஆயிரம் தொழிற்சங்கங்கள் நாளைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
துறைமுகம், புகையிரதம், சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய நாளைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், நாளைய தினம் மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டமைப்பின் தலைவர் அருண சாந்த இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாளைய போராட்டம் காரணமாக, மெனிங் சந்தை மற்றும் பல பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை அனுப்ப வேண்டாமென விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாளைய போராட்ட நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டி அணிந்து, தொழிலில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.