மக்கள் ஆணையுடனேயே நாட்டை பொறுப்பேற்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணி இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாக மாவனெல்லையில் ஆரம்பமானது.
இதன் போது மாவனெல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பஷில் ராஜபக்ஷவுடன் இணைந்த கொள்ளை கூட்டத்திலுள்ள 70 பேருடன் எனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்திக்கோ எவ்வித இரகசிய ஒப்பந்தமும் கிடையாது.
அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை மறைக்க எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அந்த கொள்ளை கூட்டத்துடன் இணையாததன் காரணமாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் பொறுப்பை ஏற்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் அதனை மக்கள் ஆணையுடனேயே ஏற்போம். வெறும் 23 சதவீதத்துடன் பொறுப்பை ஏற்க நான் தயாராக இல்லை.
பெரும்பான்மையானோரின் விருப்பத்துடன் மக்கள் ஆணையுடன் நாடு எந்த நிலைமையில் இருந்தால் பொறுப்பை ஏற்று அதனை மீளக்கட்டியெழுப்ப நாம் தயார்.
காலி முகத்திடலில் தமது எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் போராட்டத்தினை அரசியல் மயப்படுத்தாது அவர்களின் போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்.“ எனத் தெரிவித்துள்ளார்.