ஐந்து வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ஜனாதிபதி மீளப் பெற்றுக்கொண்டார். இப்பொழுது அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
பிரதானமாக மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஒரு நிலைமை வளர்ந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் கோட்டா வீட்டுக்கு போ என்று கேட்டார்கள். அதன்பின் மகிந்த வீட்டுக்குப் போ என்று கேட்டார்கள். இப்பொழுது நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை வீட்டுக்குப் போங்கள் என்று கேட்கிறார்கள். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்டவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிட்டார்கள். அது காலிமுகத்திடல் முற்றுகை.அடுத்தது மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை. அலரிமாளிகையை முற்றுகையிட்டவர்கள் அங்கே மற்றொரு போராட்ட கிராமத்தை உருவாக்கினார்கள். அதற்கு மைனா கோகம என்று பெயர் வைத்தார்கள். மைனா என்றதும் பலருக்கும் ஒரு பறவையே நினைவுக்கு வரும். ஆனால் இங்கு மஹிந்தவை ஏன் மைனா என்று அழைக்கிறார்கள் என்பதற்கு சில ஆபாசமான விளக்கங்கள் உண்டு என்று சிங்களம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இது இரண்டாவது முற்றுகை.
இவ்வாறு இரண்டு ராஜபக்சக்களையும் முற்றுகையிட்ட பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்திப்படுத்தும் மாற்றங்களையும் நடக்கவில்லை. எனவே ஆர்ப்பாட்டம் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிடும் ஒரு வளர்ச்சிக்கு வந்தது. அங்கு உருவாக்கப்பட்ட கிராமத்துக்கு ஹொரு கோகம என்று பெயர் வைக்கப்பட்டது. “ஹொரு” என்பதன் பொருள் சிங்களத்தில் திருடர்கள் என்பதாகும். அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை வீட்டுக்கு போகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்கிறார்கள்.
நாடாளுமன்றம் இவ்வாறு முற்றுகையிடப்பட்டால் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு உண்டு. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதும் வெளியேறுவதும் சவால்கள் மிகுந்ததாக மாறியுள்ளது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஒரு வளர்ச்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் அரசாங்கம் அதை தடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கலாம். எனவே நாடாளுமன்றம் தொடர்ந்து இயங்குவது என்றால் குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டக்காரர்களையாவது கலைக்க வேண்டியிருக்கும். இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம் நாடாளுமன்றத்தில் ராஜபக்சக்கள் இப்பொழுதும் தந்திரம் செய்ய முடியும் என்பதனை பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது. அந்த துணிச்சலில்தான் மஹிந்த ராஜபக்ச பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்தார். எனவே பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்தபின் ராஜபக்சக்கள் அவசரகாலச் சட்டத்தை பிறப்பிப்பது என்ற முடிவை எடுத்திருக்கலாம். இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம், ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச குடும்பத்தை மோசமாக அவமதிக்கிறார்கள். ஆத்திரமூட்டுகிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். நாடாளுமன்றத்தின் வாசலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போடப்பட்டிருக்கும் பொலிஸ் தடுப்புக்களின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உள்ளாடைகளைத் தொங்க விடுகிறார்கள். அந்த உள்ளாடைகளில் அரசாங்கத்துக்கும் ராஜபக்ஷக்களுக்கும் எதிரான கோஷங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் மேற்படி போராட்டங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் புத்தாக்கத் திறனைக் காட்டுகின்றன. உலகின் மிக நூதனமான போராட்டங்களில் இது ஒன்று எனலாம். பல மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் தமது சவ அடக்க உரிமைக்காக முன்னெடுத்த கபன் துணிப் போராட்டத்தை போல இது ஒரு குறியீட்டு எதிர்ப்பு.
சில கிழமைகளுக்கு முன்பு எஸ்தோனியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு முன்பு பெண் செயற்பாட்டாளர்கள் அவ்வாறு ஒரு நூதனமான எதிர்ப்புப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். உக்ரைனில் பெண்களுக்கு எதிராக ரஷ்யப் படைகள் மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் நிர்வாணமாக ரஷ்ய தூதரகத்துக்கு முகத்தைக் காட்டிக் கொண்டும் வீதிக்கு பின்பக்கத்தை காட்டிகொண்டு வரிசையாக நின்றார்கள்.
இதுபோலவே பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இந்தியப் படைகள் பெண்களுக்கு எதிராக மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் நிர்வாண போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். உலகில் இவ்வாறு அரசாங்கங்களுக்கு எதிராக நிர்வாணமாக நிற்கும் ஒரு போராட்ட முறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலிமுகத்திடலில் யாரும் நிர்வாணமாக நிற்கவில்லை.ஆனால், உள்ளாடைகளை அரசாங்கத்துக்கு எதிராக தொங்கவிட்டமை என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவமதிப்பு மட்டுமல்ல, ஆத்திரமூட்டும் செயலும்தான்.
இவ்வாறான காரணங்களின் பின்னணியில்தான் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்துவது என்ற முடிவை எடுத்திருக்கலாம். அச்சட்டத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்கும் விதத்தில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம்,அமேரிக்கா ஜெர்மனி,சுவிற்சலாந்து போன்றன அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக ருவிற் செய்திருக்கின்றன.
ஆனால் இந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த முப்பது நாள் போராட்டங்களை தொகுத்து கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு. கடந்த முப்பது நாட்களாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களும் அல்லது அந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக மகா நாயக்கர்கள் அரசாங்கத்தின் மீதும் எதிர்க்கட்சிகளின் மீதும் பிரயோகிக்கும் அடுத்தங்களும் ராஜபக்சக்களை இன்றுவரையிலும் முழுமையாகப் பணிய வைக்கவில்லை.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கோட்டா கோமாவில் தொடங்கி புதிது புதிதாக கிராமங்களை குட்டி போட்டுக் கொண்டு வருகிறது.ஆனால் ராஜபக்சக்கள் இந்த போராட்டக் கிராமங்களைக் கண்டு பயப்படுவதாகத் தெரியவில்லை. இதை மறுவளமாகச் சொன்னால் ராஜபக்சக்களின் மீது போராட்டக்காரர்களால் நிர்ணயகரமான அழுத்தங்களை இன்றுவரையிலும் பிரயோகிக்க முடியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய புதிதில் ராஜபக்சக்கள் இருவர் மட்டும் நாடாளுமன்றத்தில் பொறுப்புக்களை வைத்துக்கொண்டு ஏனையவர்கள் தமது பதவிகளை துறந்தார்கள். ஆனாலும் அது ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்தி படுத்தவில்லை. அதன்பின் ஒரு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல மகா நாயக்கர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனாதிபதியை மட்டும் வைத்துக்கொண்டு எல்லா ராஜபக்சக் களையும் பதவிகளில் இருந்து அகற்றிவிட்டு ஒரு புதிய அனைத்துக் கட்சி ஏற்பாட்டை உருவாக்குமாறு மகாநாயக்கர் கேட்கிறார்கள் ஆனால் அதற்கு மூத்த ராஜபக்ஷவாகிய மஹிந்த சம்மதிப்பதாக தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் தனக்கு வேண்டிய பலத்தைத் திரட்டும் சக்தி தனக்கு உண்டு என்று அவர் நம்புகிறாரா? நடந்து முடிந்த பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பு அதை நிரூபித்திருக்கிறதா? நிர்ப்பந்தங்கள் காரணமாக தனது இளைய சகோதரர் தன்னை பதவியில் இருந்து அகற்றினால் அல்லது பதவி விலகுமாறு கேட்டால் தான் எதிர்க் கட்சிகளின் வரிசையில் போய் அமரத் தயார் என்று மஹிந்த வெளிப்படையாக கூறிவிட்டார். அண்மையில் அதை அவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தெரிவித்திருக்கிறார்.
மகிந்த பதவியை விட்டு இறங்காத வரையிலும் மகா சங்கத்தை திருப்திப்படுத்துவது கடினம். அதேசமயம் ராஜபக்சக்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை கேட்கும் எதிர்கட்சிகளும் அவ்வாறான ஓர் இடைக்கால ஏற்பாட்டில் இணையச் சம்மதிக்காது. எனவே இப்போதிருக்கும் நெருக்கடிகள் மேலும் தொடரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. பொருளாதார நெருக்கடிதான் அரசியல் நெருக்கடியாக மாறியது. பொருளாதார நெருக்கடி நீக்கவில்லை என்றால் அரசியல் நெருக்கடியையும் நீக்க முடியாது. ஆனால் பொருளாதார நெருக்கடியை நீக்குவது என்றால் அதற்கு ஒரு ஸ்திரமான அரசாட்சியை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தால்தான் ஐஎம்எப் போன்ற தரப்புக்கள் உதவ முன்வரும். எனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முதலில் குறைந்தபட்சம் ஓர் இடைக்கால ஏற்பாடாகவாவது ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்பது ராஜபக்சக்களை வீட்டுக்கு போவென்று. எதிர்கட்சிகள் கேட்பதும் ராஜபக்சக்கள் வீட்டுக்குப் போக வேண்டும் என்றுதான். ஆனால் மகாசங்கம் யாராவது ஒரு ராஜபக்ஷவை பொறுப்பில் வைத்திருக்க விரும்புகிறது. அதாவது யாராவது ஒரு யுத்த வெற்றி நாயகரை ஆட்சியில் வைத்திருக்க விரும்புகிறது. இந்த விடயத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் என்பவற்றின் கோரிக்கைகளை மகாசங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. மகாசங்கம் முன்வைக்கும் இடைக்கால ஏற்பாட்டின்படி யாராவது ஒரு ராஜபக்ச காப்பாற்றப்படுவார்.
ஆனால் மகாசங்கம் முன்வைக்கும் பரிந்துரையை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்கிறார் இல்லை. நாடாளுமன்றத்தைத் தனக்கு சாதகமாக கையாள முடியும் என்று அவர் நம்புகிறார். இப்படிப் பார்த்தால் குறைந்தபட்சம் இடைக்கால ஏற்பாடாகவாவது ஒரு ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்தக் கூடிய வல்லமை அரசாங்கத்திடமும் இல்லை, எதிர்க்கட்சிகளிடமும் இல்லை. மகா சங்கத்திடமும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புதிய தலைமுறையிடமும் இல்லை. ஆயின் பொதுமக்கள் வரிசையில் நிற்பதையும், விலைகள் எட்டமுடியாத உயரத்திற்குச் செல்வதையும் யார் தடுப்பது?