உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உட்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
இதேவேளை, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் 90 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.
இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.