காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் வழங்கிய வாக்குமூலத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்ததாகவும், காலி முகத்திடல் மைதானத்திற்கு இரண்டு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, இறுதி நேரத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தனக்கும் பல மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் கூறப்பட்டதாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கலவரக்காரர்கள் பொலிஸ் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசித்ததாகவும் நிலைமையை ஜனாதிபதிக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியிருந்தால் இந்நிலைமையை தடுத்திருக்க முடியும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளதுடன், தனது திட்டம் தொடர்பாக எந்தவொரு இளநிலை அல்லது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியையும் அழைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.