ஐ.பி.எல். ரி-20 தொடரின் 63ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மும்பையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெய்ஸ்வால் 41 ஓட்டங்களையும் படிக்கல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் அவிஷ்கான், ஹோல்டர் மற்றும் அயுஸ் பதோனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தீபக் ஹூடா 59 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட், பிரசீத் கிருஸ்ணா, ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.