தெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கெர்சன் நகர மக்கள் ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பிறப்பித்தார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவிடம் வீழந்த முதல் மற்றும் ஒரே பெரிய நகரம் கெர்சன் ஆகும். ஸபோரிஷியா நகரம் தற்போது உக்ரைன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கெனவே, கிழக்கு உக்ரைனில் தங்களது ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு ரஷ்ய கடவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் சட்டமூலம் ரஷ்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷ்யர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததை இரத்து செய்வதற்கான சட்டமூலம் இதுவாகும்.
ரஷ்யாவில் 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவிப்பதால், அவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்களிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.