இலங்கைக்கும், சீனாவுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைக்கும், சீனாவுக்கும், இடையில் 1952ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தத்துடன் தான் ‘இராஜதந்திர உறவுகள்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், சீனா தனது கனவுத் திட்டமான ஒரே பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியினுள் இலங்கையை உள்வாங்குவதற்கு கடுமையான பிரயத்தனம் செய்தது. அதில் வெற்றியும் கண்டது. இதற்காக சீனா பல விலைகளை கொடுத்தது.
குறிப்பாக, கூறுவதானால் அரசியல்வாதிகளுக்கு இலவச பயிற்சிப்பட்டளைகள் என்ற பெயரில் சீனப்பயணங்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னெடுத்திருந்தது கடந்தகால வெளிப்படை உண்மைகளாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு சீனா பல்வேறு நிதி உதவிகளை வழங்கியிருக்கின்றது. அதில் நன்கொடைகளும் உண்டு. வட்டி அடிப்படையில் வழங்கியதும் உண்டு.
ஆனால் இவ்வாறு சீனா வழங்கிய நிதி உதவிகளின் பின்னால் ஏதோவொரு வகையில் காரணங்கள் ஒழிந்து கொண்டிருக்கும். அது நிச்சயமாக ‘சீன நலனை’ அடிப்படையாகக் கொண்டதாக தான் இருக்கும்.
இவ்வாறிருக்கையில், இலங்கை அண்மைய காலத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால், சீனாவுக்கு மிக நெருங்கிய நண்பராக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே பதவியில் இருந்து நீங்கியுள்ளார்.
தனது நெருங்கிய நண்பர் பதவியில் இருந்து இறங்குவதற்கான காரணத்தை கண்டறிந்தும் சீனா இம்முறை காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை என்பது தான் அதன் சாயத்தை வெளுக்கச் செய்திருக்கின்றது.
சீனாவைப் பொறுத்தவரையில், வடக்கில் கால்பதிப்பதற்கு அதிகளவில் பிரயத்தனம் செய்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக புதுப்பிக்க சக்தி உருவாக்கம் என்ற அடிப்படையில் குடாநாட்டுத் தீவுகளில் காலூன்ற முயன்றது. கூடவே மன்னாரிலும் தனது பார்வையை செலுத்தியது.
இருப்பினும், இலங்கைக்கு இந்தியாவுடன் காணப்பட்ட உறவுகளும், இராஜதந்திர உறவுகளின் ஊடாக ஏற்பட்ட அழுத்தங்களும் சீனாவின் முயற்சிக்கு ‘செக்’ வைத்து விட்டன. இது சீனாவைப் பொறுத்தவரையில் பெரும் பின்னடைவு தான்.
அதுமட்டுமன்றி கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு பிராந்தியத்தினை சீனா தன்னகத்தே வைத்திருக்கும் அதேவேளை, கிழக்கு முனையத்தினை இந்தியா, யப்பான் கூட்டுறவில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினையும் இரத்துச் செய்வதற்கு திரைமறைவில் காரணமாக இருந்தது.
எனினும், பின்னர், இலங்கை இந்தியாவுக்கு கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை வழங்கியது. அத்துடன் துறைமுக நகரத்திட்டமும் எதிர்பார்த்த வெற்றியை வரையறுத்த காலத்திற்குள் அளித்திருக்கவில்லை.
இவையெல்லாம், ஆட்சி மாறிய பின்னரும் நீடித்தமையானது, சீனாவுக்கு நிச்சயமாக குடைச்சலைக் கொடுத்திருக்கும். தன்னுடைய ஆட்கள் (ராஜபக்ஷக்கள்) ஆட்சியில் இருக்கின்றார்கள் என கருதிய சீனாவுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமையானது நிச்சயமாக திண்டாட்டத்தினை ஏற்படுத்தியிருக்கும்.
இதனால், தான் மஹிந்த பதவியில் இருந்து இறங்கும் நிலை ஏற்படும் வரையில் சீனா அமைதியாக இருந்துவிட்டது. அதன் பின்னரும் அமைதியாகவே இருக்கின்றது.
இதனைவிட, பிறிதொரு காரணமும் உள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமையை எடுத்துக்கொண்டால் தற்போது பணவீக்கம் 40 சதவீதத்தினை தொட்டு விட்டது. அத்துடன் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த முடியாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்து விட்டது.
இந்நிலையில் ஏற்கனவே இலங்கையின் மொத்தக் கடனில் காணப்படும் 47 சதவீத வெளிநாட்டுக்கடனில் 10 சதவீதத்தினைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மீண்டும் இலங்கைக்கு கடன்களை வழங்குவதில் அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வழங்கிய கடன்களை மீளப் பெற முடியாது விழி பிதுங்கி நிற்கும் சீனா மேலதிகமாக கடன்களை வழங்குவதற்கு முன்வராது.
ஏனென்றால், அந்த நாட்டைப் பொறுத்தவரையில், தனது பொருளாதார நலன்களுக்கே பிரதான இடத்தினை வழங்குகின்றது. அதுமட்டுமன்றி புதிதாக கடன்களை வழங்குவதாக இருந்தலும் அந்நாடு பிறிதொரு நிபந்தனையையும் கொண்டிருக்கின்றது.
அதாவது, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்தும் தொகையை தனது நாட்டு வங்கியூடாக புதிய வட்டி வீதத்தில் வழங்கி விட்டு அக்கடன்கள் அடைக்கப்பட்டவுடன் மீண்டும் இலங்கையின் அத்தியதாசியமான தேவைகளுக்கு தேவையான கடன்களையும் புதிய வட்டி வீதத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தினுள் வழங்க முடியும் என்பதில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் இந்த இறுக்கமான நிலைப்பாடு பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கையை ஒட்டுமொத்தமாக கடனால் மூழ்கடிக்கச் செய்யும் இலக்கை கொண்டதாக பார்க்க வேண்டியுள்ளது.
இதனால், தான் அண்மைய நாட்களில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் சீனா மதில் மேல் பூனையாக இருந்து வருகின்றது. ஆனால் மறுபக்கத்தில் பிறிதொரு நகர்வினையும் முன்னெடுத்துள்ளது.
ஆட்சியாளர்களுடன் குறிப்பிட்ட இடைவெளிகளைப் பேணிக் கொண்டிருக்கும் சீனா நேரடியாக மக்களை நோக்கி நகர்ந்துள்ளது. மக்களுடன் மக்கள்’ இராஜதந்திர மூலோபாயத்தினை கையிலெடுத்துள்ளது.
அதனாலேயே அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத்தூதுவர் பல தரப்பட்ட சந்திப்புக்களையும் செய்ததோடு, உலர் உணவுப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாகவே வழங்கியிருக்கின்றார்.
அதேபோன்று, தென்னிலங்கையிலும், ராஜபக்ஷக்களின் முகாமிலிருந்து வெளியேவந்துள்ள விமல்வீரவன்ச, உதயகம்மன்பில உள்ளிட்டவர்கள் ஊடாக உதவிப்பொருட்களை சிங்கள மக்களை சென்றடையச் செய்துள்ளது சீனா.
இந்தச் செயற்பாடானது, ஆட்சியாளர்களை புறமொதுக்கி மக்களை தமது கைக்குள் போட்டுக்கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும் நகர்வாகும். இது இலங்கையின் இறைமையைக் கூட கேள்விக்கு உட்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தலாம். ஆபத்துக்களை உணரவேண்டியது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மக்களும் தான்.