நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒரு தனிநபர் மீது மட்டும் குற்றம் சுமத்தக்கூடாது என்று அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மே9 ஆம் திகதி எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இங்கு உள்ள மக்கள் பிரதிநிதிகள் 72 பேரின் வீடுகள் 12 மணிநேரங்களில் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறான சம்பவங்கள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.
83 கலவரத்தைப் போன்று, இந்த சம்பவம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்.
தவறொன்று இடம்பெறலாம். ஆனால் அந்தத் தவறுக்கு இன்னொரு தவறினால் தீர்வொன்றை கண்டுவிட முடியாது.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமோ அல்லது வேறு ஒரு தனிநபர் மீதோ நாம் பழியை சுமத்திவிட முடியாது.
உண்மையில் இந்த நாட்டில் இரண்டு வரவு- செலவுத் திட்டங்களே முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலில் நிதியமைச்சராக ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர், பேராசிரியர் என்.எம்.பெரேரா சமர்ப்பித்துள்ளார். இதற்குப் பின்னரான வரவு – செலவுத் திட்டங்கள் அனைத்தும் இன்னொருவர் தயாரித்தே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அன்று ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாஸ்கரலிங்கத்தினால் தயாரிக்கப்பட்டது. இன்று பீ.பி.ஜயசுந்திரவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்தப் பாவத்திற்கு இன்று நாமும் சிக்குண்டுள்ளோம். இதனால்தான் நாட்டிலும் இந்தப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனத் தெரிவித்தார்.