தாய்வானை சீனாவிடமிருந்து எந்த நாடாவது நினைத்தால் பிரிக்க நினைத்தால், அதனை எதிர்த்து போர் தொடங்கவும் தயங்கப் போவதில்லை என சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லோய்ட் ஆஸ்டினுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்திய சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வேய் ஃபெங்கே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘சீனாவிடமிருந்து தாய்வானைப் பிரிக்கும் நடவடிக்கையில் எந்த நாடாவது ஈடுபட்டால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு புதிய போரைத் தொடங்கவும் சீன இராணுவம் தயங்காது. அதற்காக எந்த விலை கொடுக்கவும் சீனா தயாராக இருக்கிறது.
தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் எந்தவொரு சதிச் செயலையும் நாங்கள் முறியடிப்போம். சீன ஒருமைப்பாட்டை எப்பாடுபட்டாவது காப்போம்’ என கூறினார்.
சீனாவில் கடந்த 1949இல் நடந்த உள்நாட்டுப்போருக்கு பிறகு தாய்வான் தனிநாடாக உருவானது. ஆனாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசாங்கம் கூறி வருகிறது
எனினும் தாய்வான், சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜனநாயக முறையிலான அரசாங்கம் தான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
ஆனால், தேவை ஏற்பட்டால் சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது.
இதனிடையே கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்கள் தாய்வானில் பதிவாகி வருகின்றது.
ஆனால், தாய்வானுக்கு சீனா மூலம் அச்சுறுத்தல் வரும் பட்சத்தில், அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.