குருந்தூர் மலையில் குருந்தாஸோக என்ற விகாரை இருந்தமைக்கு மகாவம்சத்தில் சான்றுகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் கடந்த 12 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றினை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் பௌத்த தேரர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விடயம் குறித்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர, “வடக்கில் சில பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் பௌத்த சாசனத்திற்கு உரிய கௌரவத்தை வழங்குவதில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் முக்கியமான அமைச்சர் ஒருவர் நயினாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு முழுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னர், முல்லைத்தீவில் குருந்தாஸோக என்ற வரலாற்று விகாரையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குண்டர்கள் சிலருடன் வந்து அதனை முழுமையாக சீர்குலைத்தனர்.
உண்மையில் பௌத்த நாட்டில், பௌத்த சாசனத்தைப் போசிப்பதற்கு இடமளிக்காவிட்டால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை சீர்குலைப்பதற்கு தலைமைத்துவம் வழங்குவார்களாயின் அது உங்களது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
இந்த குருந்தாஸோக என்ற விகாரை 2000 ஆண்டுகள் பழமையானதாகும். நூறாம் கிறிஸ்து வருடத்தில் கல்லாட்ட என்ற அரசர்தான் இதனை நிறுவி இருக்கின்றார்.
அதன் பின்னர், 571ஆம் கிறிஸ்து வருடத்தில் முதலாம் ஹக்பு மன்னர் இதனை புனரமைத்தார். அதன் பின் நாம் அனைவரும் அறிந்த மகா விஜயபாகு மன்னர் 1055 இல் அதனை மீண்டும் புனரமைத்தார் என்று மகாவம்சத்தில் கூறப்பட்டிருக்கின்றது.
2021ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தினால் ஜனவரி மாதம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, பல பௌத்த தொல்பொருட்கள் அங்கு தோன்றின.
இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களம் அவசியமான அனைத்து தரப்பினருக்கும் அறியப்படுத்தி, 100 க்கும் அதிகமான தேரர்களை அழைத்து, புத்தர் சிலையை நிறுவ முற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் குண்டர்களுடன் சென்று அந்தத் தேரர்களுக்கு ஒரு மலரையேனும் வைக்க இடமளிக்கவில்லை. இதற்கு அரசாங்கத்தின் பணம் பயன்படுத்தப்படவில்லை.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாசனத்திற்கும், தேரர்களுக்கும் ஏற்படுத்திய அபகீர்த்தியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சிங்கள பௌத்தர்களின் பொறுமை மற்றும் இரக்கத்தை அலட்சியமாக கருத வேண்டாம்.
அந்த பொறுமைக்கும் எல்லை உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.