கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தொட்டுள்ளது.
மேலும், 1,500பேர் காயமடைந்தனர் மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்திகா மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் காபூல் மற்றும் கார்டெஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று பக்திகா தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் முகமது அமின் ஹொசைஃபா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் உள்ள புகைப்படங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாகி, போர்வைகளில் உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டியது.
ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, காயமடைந்தவர்களைச் சென்றடையவும், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சக அதிகாரி சலாவுதீன் அயூபி தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இது தென்கிழக்கு நகரமான கோஸ்டில் இருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு மாகாணமான பக்திகாவில் இருந்தன. அங்கு 255பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோஸ்ட் மாகாணத்தில், 25பேர் இறந்தனர் மற்றும் 90பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆளும் தலிபான் கட்சியின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்சாதா தனது இரங்கலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.