வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது.
எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணுஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது.
அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன. எனினும், அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தினார்.