முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகளின் உரிமையாளர்கள் எரிபொருள் மாபியாவை உருவாக்கி அரச ஊழியர்களையும் பொதுமக்களையும் சுரண்டும் மோசடியான தொழிலை முன்னெடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும் மாஃபியாவில் சில எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களும் உரிமையாளர்களும் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை தெரிவிக்கப்படும் நிலையில், ஒரு போத்தல் பெற்றோல் 900 ரூபாவிற்கும், ஒரு லீற்றர் டீசல் 900 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றினை 450 ரூபாவிற்கும் அதிகமாக சிலர் விற்பனை செய்வதாக பாவனையாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
சுமார் 08 இலட்சம் முச்சக்கரவண்டிகள் இந்த மாஃபியாவுடன் இணைந்து செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் ஏனைய வாகனங்களை நிறுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதவாறு வாகனங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சில முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பயணிகள் போக்குவரத்திலிருந்து விலகி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதையே தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.