எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ”வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்வோரின் நலன் கருதி, ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் நிலையங்களை பல இடங்களில் தற்போது நாம் திறந்துள்ளோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மாத்தறை, வவுனியா, கண்டி போன்ற பகுதிகளில் இந்த நிலையங்களை திறக்கவுள்ளோம்.
எனவே, தூர பிரதேசங்களில் இருந்து பத்தரமுல்லைக்கு எவரும் வரவேண்டியத் தேவைக்கிடையாது.
எமது துயரங்களை நாம் தான் போக்கிக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என நினைத்தால், அனைத்தையும் வெற்றிக் கொள்ள முடியும்.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை யுகத்தினால், சுற்றுலாப்பயணிகள் வருகைத் தரும் வீதம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.
இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டியது எமது கடமையாகும். நாம் முதலீடுகளை மீண்டும் நாட்டுக்குள் ஈர்க்க வேண்டும்.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்னமும் எனது பணிகளை முழுமையாக ஆரம்பிக்கவில்லை.
இருப்பினும். நான் வேலை செய்துக் கொண்டுதான் உள்ளேன்”- எனத் தெரிவித்தார்.