அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிப்பததாக அறிவித்துள்ள நிலையில், இதன்காரணமாக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரிய தீபகற்பம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் விரைவாக மோசமடைவதை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா தலைவர்கள் வடகொரியாவுடனான மோதலுக்காக ஒன்றுகூடி பேசியுள்ளனர். எங்களுக்கு எதிராக அபாயகரமான கூட்டு இராணுவப் பயிற்சி குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர்.
ஐரோப்பாவை இராணுவமயமாக்குவதன் மூலம் ரஷ்யா, சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் நேட்டோ மாநாடு மூலம் உறுதியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் இரக்கமற்ற இராணுவ நடவடிக்கைகள் ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக்கில் அணு ஆயுதப் போர் போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்வதற்கு தங்களிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
வடகொரியா தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்தும், அணு ஆயுத சோதனை நடத்த அந்த நாடு முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.