அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை மீள அமுல்படுத்துவதாக பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாட்டின் தலைவர்கள் மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.
19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டு வந்து, கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
மே 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 19 ஆவதை அமுல்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்தார் என்றும்ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேலும் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மகாசங்கத்தினரை தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
19வது திருத்தத்தில் உள்ள விதிகளுக்கு மாறாக 22வது திருத்தம், பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தையும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளது என ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.
இது ஜனாதிபதியை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கு மேற்கொண்ட சூழ்ச்சி என்றும் இதன் விளைவாகவே அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாசங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.