நாட்டில் மீண்டும் வன்முறையை ஏற்படுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல அரசியல் குழுக்கள் செயற்படுவதாக அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அத்தோடு, மே 9ஆம் திகதி நடந்த சம்பவம் அரசின் சதியா என சந்தேகம் எழுந்துள்ளதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “நாடு எங்கும் மக்கள் தங்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் இப்போது என்ன செய்ய வேண்டும்? இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். அல்லது அரசாங்கம் வெளியேற வேண்டும்.
ஆனால் அரசாங்கம் தற்போது நாட்டில் இன்னொரு விதமான குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
அரசியல்வாதிகளை தாக்க மற்ற எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாங்கள் செயற்படுகிறோம் என்று தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சமூகத்தை அச்சுறுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
அடுத்த சில நாட்களில் போராட்டங்கள் மிகத் தீவிரமான நிலைக்கு செல்லும் என்பது மிகத் தெளிவாகக் காணமுடிகிறது.
இதை சமாளிக்க அரசு வெளியிட்ட வேடிக்கையான அறிக்கையாகவே இதை பார்க்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.