ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான துப்பாக்கி சூட்டின் போது, அவருக்கு அதிக அளவிலான இரத்தப் போக்கு ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சையின் போது இரத்தப் போக்கினை நிறுத்த முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.
உடலில் பாய்ந்த இரண்டு துப்பாக்கி குண்டுகளில் ஒன்று அவரது கழுத்து மற்றும் இரண்டாவது தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துளைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், அவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் பொலிஸார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை செய்ததில், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எதிர்வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.