இந்திய விமானப்படையின் போர் விமானிகளான ஏர் கமடோர் சஞ்சய் ஷர்மா மற்றும் அவருடைய மகளான அனன்யா ஷர்மா ஆகியோர் ஒரே விமானத்தினைச் செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.
இந்திய விமானப்படையில் போர் விமானத்தினை செலுத்திய தந்தையும் மகளும் என்ற வரலாற்றை குறித்த இருவரும் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் பிதார் விமான தளத்தில் பிரித்தானிய தயாரிப்பான ஹாக்-132 என்ற விமானத்தினை செலுத்தியமையால் இந்த தனித்துவமான பதிவு இடம்பெற்றுள்ளது.
1989 இல் இந்திய விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட ஏர் கொமடோர் ஷர்மா, மிக்-21 ஸ்க்வாட்ரான் செலுத்தவல்லவர் என்பதோடு, போர் விமானங்களைச் செலுத்துவதற்கான அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் அவரது மகளான அனன்யா, 2021இல் போர் விமானியாக நியமிக்கப்பட்டு கர்நாடகா ஹாக் விமான தளத்தில் பயிற்சிபெற்றுக் கொண்டுள்ளார்.
அவர் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள நிலையில் போர் விமானியாக செயற்படவுள்ளார்.
தனது மகளுடன் விமானத்தில் பறப்பது குறித்து கருத்து தெரிவித்த ஷர்மா, அதை தனது வாழ்க்கையின் மறக்கமுடியாத மிகப்பெரிய நாள் என்றார்.
அதேநேரம், பெண்களை போர் விமானிகளாக பணியமர்த்துவதற்கான 2015ஆம் ஆண்டின் பரிசோதனைத் திட்டத்தை நிரந்தர நடவடிக்கையாக்குவதென கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையில் 20 பெண்கள் போர் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரபேல் ஜெட் விமானங்கள், MiG -21, Sukhoi -30 மற்றும் MiG-29 ஆகிய போர் விமானங்களில் இப்போது பெண்கள் பணியாற்றுகின்றார்கள்.
இந்தியாவின் முதல் ரபேல் விமானி, ஃப்ளைட் லெப்டினன்ட் ஷிவாங்கி சிங், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.