ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது.
விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசாங்க எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும் என்று ஊடகங்களிடம் கூறி அச்சத்தை குறைத்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம்- 1 எரிவாயு விநியோகம், கடந்த 10 நாட்கள் பராமரிப்பு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 40 சதவீத அளவே விநியோகிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் சீமென்ஸ் எனர்ஜியால் வழங்கப்பட்ட உபகரணங்களைத் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி, ஜூன் நடுப்பகுதியில், காஸ்ப்ரோம் எரிவாயு பாய்ச்சலைக் குறைத்தபோது, அதே அளவில் இது செயற்பட்டது.
ஐரோப்பிய ஆணையம் ரஷ்யா ஐரோப்பாவின் விநியோகத்தை நிறுத்தினால், அடுத்த ஏழு மாதங்களில் எரிவாயு பயன்பாட்டை 15 குறைக்குமாறு நாடுகளை வலியுறுத்தியது.
ரஷ்யா கடந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு 40 சதவீதம் இயற்கை எரிவாயுவை வழங்கியது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜேர்மனி மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது
ஆனால், தற்போது ரஷ்ய எரிவாயு மீதான அதன் சார்புநிலையை 55 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைத்துள்ளது. இறுதியில், ரஷ்யாவிலிருந்து எரிவாயுவைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த விரும்புகிறது.