ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை போராட்டக்கள பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன், காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன், ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.