உக்ரைனின் இராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று உக்ரைனுடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்ட மறுநாளே ஒடெசா துறைமுகத்தின் மீது ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதற்கு உக்ரைன் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், ஒடெசா துறைமுகத்தில் உக்ரைன் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகார் கொனஷென்கோவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கடல் வழியாக செலுத்தப்பட்ட அந்த ஏவுகணைகளில் ஒன்று, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் போர்க் கப்பலைத் தாக்கி அழித்தது.
மேலும், துறைமுகத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கிடங்கில், அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹார்ப்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்தன’ என கூறினார்.
முன்னதாக, உக்ரைன் இராணுவ படைப் பிரிவு ஊடகவியலாளர் நடாலியா ஹூமென்யுக் கூறுகையில், ‘ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒடெசா துறைமுகத்தின் தானியக் கிடங்குகள் எதுவும் சேதமடையவில்லை’ என்று கூறியிருந்தார்.