தாய்வானைச் சுற்றி வளைத்து சீனா நடத்தும் போர் பயிற்சிகள் உலகின் பரபரப்பான பேசுப்பொருளாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை தாய்வான் கடற்பரப்புக்கு அனுப்பியுள்ளது.
யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாய்வானின் தென்கிழக்கே நீரையும் உள்ளடக்கிய பெருங்கடல் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் மற்றும் தாக்குதல் போர் கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கடலில் வழக்கமான, திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்கிறது. இது சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஆதரவாக அவரது வழக்கமான ரோந்துப் பகுதியாகும்’ என கூறினார்.
இதனிடையே, கிழக்கு தியேட்டர் கமாண்டின் ரொக்கெட் படை, தாய்வானின் கிழக்கு கடற்கரையில் ஒரு வழக்கமான ஏவுகணை ஏவுதலை நடத்தியது என்று சீன அரசு ஊடகம் கூறியது. அது இலக்கை துல்லியமாக தாக்கியது என மேலும் தெரிவித்துள்ளது.