ரஷ்யா – உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை வந்தடைந்தது.
உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் திகதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் நேற்று (திங்கட்கிழமை) துருக்கியை வந்தடைந்தது.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள் அனுப்பப்படவுள்ளன. 3,22,000 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் புறப்பட்டுள்ளன.
உக்ரைனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட மேலும் 4 கப்பல்கள் விரைவில் துருக்கியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சியெரா லியோன் நாட்டுக் கொடியுடன் 26,000 மெட்ரிக் டன் கோழித் தீவனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் திட்டமிட்டபடி இன்னும் லெபனானை சென்றடையவில்லை. அந்தக் கப்பல் வருவதற்குத் தாமதமானதால் உணவு தானியத்தை வாங்கவிருந்தவர் மறுப்பு தெரிவித்ததாகவும், வேறு யாராவது வாங்குவதற்காக அந்தக் கப்பல் லெபனான் அருகே காத்திருப்பதாகவும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.