ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார்.
அலெக்சாண்டர் டுகினும் அவரது மகளும் மாஸ்கோவிற்கு அருகில் ஒரு திருவிழாவில் கலந்துக்கொண்டனர். அங்கு தத்துவஞானி சனிக்கிழமை மாலை விரிவுரை வழங்கினார்.
நிகழ்வினை முடித்துக்கொண்டு, இருவரும் ஒரே காரில் இடத்தை விட்டு வெளியேற இருந்தனர். ஆனால், டுகின் கடைசி நிமிடத்தில் தனித்தனியாக பயணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
போல்ஷியே வியாசெமி கிராமத்திற்கு அருகில் காரை ஓட்டி வந்த தர்யா டுகினா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்துச் சிதறியதாகவும், வாகனம் தீப்பிடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, டெலிகிராம் பதிவில், உக்ரைனிய தொடர்பு கண்டறியப்பட்டால் அது ‘அரச பயங்கரவாதத்திற்கு’ சமம் என்று கூறினார்.
ஆனால், உக்ரைனிய அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தில் உக்ரைனிய தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியான சபோரிஸியாவில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு உக்ரைன் விஷம் கொடுத்துள்ளதாக ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய வீரர்கள் காலாவதியான இறைச்சியை சாப்பிட்டதால் உடல் நலம் சரியில்லாமல் ஆகி இருக்கலாம் என்று உக்ரைன் விளக்கம் அளித்துள்ளது.
அலெக்சாண்டர் டுகின்