சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(புதன்கிழமை) நாட்டுக்கு வருகை தரவுள்ளது.
இந்தக் குழு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருவர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மையற்றது என மதிப்பிடப்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையின் கடன் வழங்குநர்களின் போதுமன உத்தரவாதங்கள் அவசியமாகும்.
இந்த விஜயத்தின்போது, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், ஏனைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் இன்றைய தினம் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்துவர் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.