நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்களில் சிலரை 2017, 2019 ஆம் ஆண்டுகளில் விடுதலை செய்து 12 முதல் 26 வருடங்கள் சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கப்பட போதும் போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ விடுதலையாகவில்லை என்றும் கே.வி.தவராசா தெரிவித்தார்.