ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் இங்கிலாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக, ஜார்க்கண்ட் அரசாங்கத்துடன் இங்கிலாந்து அரசாங்கம் பேச்சுக்களில ஈடுபட்டிருந்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
செவெனிங் மராங் கோம்கே ஜெய்பால் சிங் முண்டா (எம்ஜிஜேஎஸ்எம்) என்ற உதவித்தொகைத் திட்டத்தின் மூலமாக ஜார்க்கண்டில் இருந்து ஐந்து அறிஞர்கள் வரை இங்கிலாந்தில் ஒரு வருட முதுகலைப் படிப்பைத் தொடர முழு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
எம்ஜிஜேஎஸ்எம் புலமைப்பரிசில் திட்டங்கள் 2023 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று இந்தியாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
செவெனிங் விருதுகள் திட்டமானது பிரித்தானியாவில் கற்பதற்கான உதவித்தொகை மற்றும் நிதியளிப்புக்கள் வழங்குவதன் மூலம் எதிர்கால தலைவர்களை உருவாக்குகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை இந்தியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், மாநிலத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
இதன்போது, இந்தியாவுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், ‘கல்வி மற்றும் காலநிலையில் முதலீடு செய்வது நமது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த பரிசு.
முதல்வர் சோரன் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள எங்கள் கூட்டாளிகளின் கருணையுடன் கூடிய ஆதரவுடன், இன்று அதைச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வேறொரு நாட்டில் கல்வி கற்பது புதிய அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறந்த அறிஞர்கள் முழு நிதியுதவியுடன் இங்கிலாந்தின் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.
தனது பயணத்தின் போது, உயர் ஸ்தானிகர் வணிக வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்றதோடு இங்கிலாந்துக்கும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தார்.