எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி போன்ற நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 கீழ் 1 தீர்மானம் காலாவதியானதையடுத்து, புதிய தீர்மானத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனித உரிமை மீறல்கள், கைதுகள், அவசரகாலச் சட்டம் அமுல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் வரை அமுல்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்து அந்த சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தியமை, செயற்பாட்டாளர்களை கைது செய்தல், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை என்பன புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது, நீதியைப் பெற்றுக் கொடுப்பது, யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு பொறுப்புக் கூறுவது போன்ற விடயங்களும் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.