ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க 15பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து விளையாடவுள்ள அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான அணி விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், தனது முதல் உலகளாவிய தொடரில் தலைவராக அணியை வழிநடத்துகின்றார்.
தேசிய அணி மற்றும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹன்ட்ரெட் தொடரில் மோசமாக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக பில் சோல்ட்டை அணி நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது.
பட்லர் தற்போது கால் காயத்தால் ஓய்வில் உள்ளார். ஆகையால் உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், முன்னணி வீரரான மொயின் அலி அணியை வழிநடத்துவார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் கடைசி கட்டத்தில் பட்லர் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்தின் சமீபத்திய தொடரில் விளையாடிய பிறகு இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் மாலனும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வுப்பெற்ற முன்னாள் அணித்தலைவர் ஓய்ன் மோர்கனுக்கு மாற்றாக இருக்கிறார்.
பந்துவீச்சு தரப்பில், போட்டியின் இறுதிக் காயம் வரை கடந்த ஆண்டு போட்டியில் முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்திய டைமல் மில்ஸ், பிரதான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் லியாம் டாசன் மற்றும் ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோருடன் இணைந்து பயணிக்கும் அணியின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இதுதவிர வேகப்பந்து வீச்சாளர்களான மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அந்தந்த காயங்களிலிருந்து மீண்டு 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்
ரி-20 உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான 19பேர் கொண்ட அணியில், ஜோர்டான் காக்ஸ், டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், ஓலி ஸ்டோன் மற்றும் லூக் வுட் ஆகிய ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரி-20 உலகக்கிண்ண தொடருக்காக பெயரிடப்பட்ட அதே அணி தான், அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான தொடரிலும் விளையாடவுள்ளனர்.
ரி-20 உலகக்கிண்ணம் மற்றும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம்!
ஜோஸ் பட்லர் தலைமையிலான அணியில், மொயீன் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹரி புரூக், சம் கர்ரன், கிறிஸ் ஜோர்தான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி விபரம்!
ஜோஸ் பட்லர் (உடற்தகுதி பொறுத்து) தலைமையிலான அணியில், மொயீன் அலி, ஹரி புரூக், ஜோர்தான் காக்ஸ், சேம் கர்ரன், பென் டக்கெட், லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டொம் ஹெல்ம், வில், ஜெக்ஸ், டேவிட் மாலன், அடில் ரஷித், பில் சால்ட், ஒலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வூட் மற்றும் மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.