வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே இரவில் குறைந்தது 8பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத் அருகே 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்த நிலநடுக்கம் குனார் மாகாணத்தில் நிதி மற்றும் மனித இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது’ என்று குனாரின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநரும் ஆளுநரின் செய்தித் தொடர்பாளருமான மவ்லவி நஜிபுல்லா ஹனிஃப் பக்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஹனிஃப் பக்தர் கூறினார்.
இதுதவிர, குனார், லக்மன் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களிலும், தலைநகர் காபூலிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்து குஷ் மலைத்தொடர் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான் வழியாக செல்கிறது.
2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 380பேர் உயிரிழந்தனர்.
கடுமையான இஸ்லாமிய ஆட்சியை தலிபான் திணிப்பதன் காரணமாக உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதால், இத்தகைய பேரழிவுகள் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பெரிய தளவாட சவாலாக உள்ளன.