பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின் கடும் போட்டியாளரான சுனக் 60,000க்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளார்.
சுனக்கின் 60,399 (43%) வாக்குகளுடன் ஒப்பிடுகையில், ட்ரஸ் 81,326 (57%) வாக்குகளைப் பெற்றார். 82.6% வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்படுகின்றது.
வெற்றியின் பின், லிஸ் ட்ரஸ் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை வழங்க முடியும் என்பதை கன்சர்வேட்டிவ் கட்சி காட்ட வேண்டும் என்று கூறினார்.
வரிகளை குறைத்து பிரித்தானிய பொருளாதாரத்தை வளர்க்க தன்னிடம் ஒரு தைரியமான திட்டம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
47 வயதான லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், மார்கரெட் தாட்சர், தெரசா மேவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நாளை அவர் தனது பிரித்தானிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பிற்காக பால்மோரலில் உள்ள ராணியை சந்திக்கும் போது அவர் பிரதமராக பதவியேற்பார்.
லிஸ் ட்ரஸை அவரது அடுத்த வருங்கால எதிர்ப்பாளரான தொழிற்கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் வாழ்த்தியுள்ளார்.
பொரிஸ் ஜோன்சன் 2019இல் தனது தலைமைப் போட்டியில் 66.4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். டேவிட் கேமரூன் 2005இல் 67.6 சதவீதம் மற்றும் இயன் டங்கன் ஸ்மித் 2001இல் 60.7 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது வேலையின் இறுதி நாளுக்காக டவுனிங் வீதிக்கு வந்தடைந்தார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1,139 நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். கொரோனா விதிகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் நெருங்கடிக்கு மத்தியில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நாளை ஜோன்சன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் இருவரும் அதிகாரத்தை, அதிகார பூர்வமாக ஒப்படைப்பதற்காக ராணியை சந்திக்க ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரலுக்கு செல்வார்கள்.
பின்னணி
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தியது.
பல்வேறு கட்டங்களாக நடந்த வாக்கெடுப்பில் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.
அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஒன்லைன் மூலமாகவும் வாக்களிதனர். இந்த வாக்குப்பதிவு செப்டம்பர் 2ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள இரண்டு இலட்சம் உறுப்பினர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யதனர்.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற லிஸ் ட்ரஸ் இன்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரதமராக பதவியேற்பார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போரின் பின்னணியில் எரிசக்தி விலைகள் உயர்வு, தலைமுறைகளில் மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடி என பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் லிஸ் ட்ரஸ் பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.