சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தணிக்கை மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த தயாராகிவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர் என்று சீனாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பெருகிவரும் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் பெருகிய முறையில் இறுக்கமான உறவுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்னர் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். மேலும், சீன ஜனாதிபதி கொவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் நடுப்பகுதியில் நடைபெறும் முக்கிய ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸில் ஸி ஜின்பிங், முன்னோடியில்லாத வகையில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த சந்திப்பு தகவல் வந்துள்ளது.