இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல் பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக, அவருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காகக் கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையின் உதவியைக் கோரி விண்ணப்பம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த இலங்கை கடற்படை, நோயாளியைக் கரைக்கு அழைத்து வருவதற்காக மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படைக் கலமொன்றை மருத்துவக் குழுவினருடன் குறித்த கடற்பரப்பிற்கு விரைவாக அனுப்பிய நிலையில் குறித்த நோயாளி கடற்படைக் கலத்திற்கு மாற்றப்பட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டவாறு கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.















