கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலில், குறைந்தது 24பேர் உயிரிழந்துள்ளனர்.
கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை 24 உடல்கள் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பேட்கன் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறியது.
மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் எல்லையில் தொடங்கிய மோதல்கள் வெள்ளிக்கிழமை டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ரொக்கெட் லொஞ்சர்கள் சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான சண்டையாக வளர்ந்தது.
ஷெல் தாக்குதலின் ஒரு பகுதியாக, தாஜிக் படைகள் பிராந்திய தலைநகரான பேட்கனை ரொக்கெட்டுகளால் தாக்கின.
கிர்கிஸ்தானின் அவசரகால அமைச்சகம், சண்டையால் சூழப்பட்ட பகுதியிலிருந்து 136,000 மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறியது.
இரண்டு முன்னாள் சோவியத் மத்திய ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே பதட்டமான எல்லையில் சண்டையைத் தூண்டியது எது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி விரைவில் தோல்வியடைந்தது.
இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புத் தலைவர்கள் நள்ளிரவில் சந்தித்து, சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு கூட்டு கண்காணிப்பு குழுவை உருவாக்க ஒப்புக்கொண்டனர்.
இந்த சந்திப்பு சண்டையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், கிர்கிஸ்தான் எல்லை சேவை, தாஜிக் தாக்குதல்களை முறியடிக்கும் பணியில் தனது படைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறியது.
தண்ணீர் பங்கீடு உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்துவதில் ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.